“சிக்னல் அட் 11.30” ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட திரையரங்க அனுபவத்தை வழங்கும்! – நடிகை பவ்யா திரிகா
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், புதுமையான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை பவ்யா திரிகா, தற்போது மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னடா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்ட நடிகை பவ்யா திரிகா, இயக்குநர் மலர்விழி நடேசனின் கதை சொல்லும் விதமும், படத்தின் தனித்துவமான கதைக்களமும்தான் தன்னை முதலில் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மலர்விழி மேமின் கதை சொல்லும் விதமும், ஒரு படைப்பை அவர் அணுகும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, ஒரு பெண் இயக்குநரின் இயக்கத்தில் பணியாற்றப் போகிறோம் என்பதும், ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதைக்களமும் இந்தப் படத்தில் என்னை இணைத்துக்கொள்ள முக்கியக் காரணமாக அமைந்தது.
திரைத்துறையில் பெண் இயக்குநர்கள் இன்னும் அதிக அளவில் உருவாக வேண்டும். ஒரு திரைப்படம் குறித்த விவாதம் நடக்கும்போது, அதை இயக்கியவர் பெண் என்பதைக் காட்டிலும், அவர் உருவாக்கிய படைப்பைப் பற்றியே அதிகம் பேசப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
படப்பிடிப்புத் தளத்தில் மலர் மேடம் அனைத்து கலைஞர்களிடமும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் நடந்துகொண்டார். அவரது அணுகுமுறை படக்குழுவினர் அனைவரிடமும் ஒரு நல்ல புரிதலையும், ஒத்துழைப்பையும் உருவாக்கியது. ஜெயப்பிரகாஷ் சார் மிகவும் எளிமையானவர்; அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம்.
என்னுடைய முதல் திரைப்படத்திலேயே சந்தோஷ் பிரதாப்புடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மீண்டும் அவருடன் இந்தப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளித்தது. புஜிதாவும் மிகவும் இனிமையானவர். ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்களுடன் பணியாற்றுவது போன்ற உணர்வுதான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தது. இதனால் அனைவருக்கும் இடையே இயல்பான புரிதல் ஏற்பட்டது. அந்த நேர்மறையான சூழல் படப்பிடிப்பு முழுவதும் நீடித்தது” என்றார்.
தொடர்ந்து படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பேசியவர், “இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் எனக்கே முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தன. இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் கிடைக்காத சில வித்தியாசமான அனுபவங்களை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அளித்த முழுமையான ஒத்துழைப்பு, அந்தக் காட்சிகளில் சிறப்பாகப் பணியாற்ற எனக்குப் பெரிதும் உதவியது” என்று தெரிவித்தார்.
படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பவ்யா திரிகா, ரசிகர்களுக்கான தனது அழைப்பாக, “’சிக்னல் அட் 11.30’ ரசிகர்கள் அவசியம் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம். வழக்கமான அனுபவத்திலிருந்து மாறுபட்டு, இதுவரை கிடைக்காத ஒரு புதிய திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்கு வழங்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.
மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இப்படத்தை வழங்குகின்றனர்.
தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளராக டி. இமான், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாச்சார்ஜி, படத்தொகுப்பாளராக ஆர். கலைவாணன் மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் பணியாற்றியுள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்துடனும், சுவாரஸ்யமான திரைக்கதை அனுபவத்துடனும் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.