பூஜையுடன் துவங்கிய தனுஷின் 56 வது படத்தின் சுவாரசிய தகவல்கள் :
சித்தாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையில், ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் D56 திரைப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை இன்று (செப்டம்பர் 25, 2026) சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரளான ரசிகர்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வடிவேலு இப்படத்தில் இணைந்தது குறித்து பேசுகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களுக்கிடையே ஏற்பட்ட சில தவறான புரிதல்களே இத்தனை காலம் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்குக் காரணம் என்றும் கூறினார். D56 அரசியல் சார்ந்த திரைப்படம் அல்ல என்றும், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் கதையைக் கேட்டபோது பெருமையும் ஆச்சரியமும் ஏற்பட்டதாகவும், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், பல சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி D56 படத்தின் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் சிறந்த எழுத்தாளராகவும் இயக்குநராகவும் தமிழரசன் பச்சமுத்து தன்னை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், D56 படத்திலும் அவரது தனித்துவமான எழுத்து நடை வெளிப்படும் எனக் கூறினார். மேலும், பிரம்மாண்டமான அளவில் உருவாகும் இப்படம், மண்ணின் தன்மையோடு இணைந்த ஒரு சிறப்பான கதையாக இருக்கும் என்றும், இப்படம் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் பேசுகையில், “கடவுளையும் உங்களையும் நம்பி D56 படத்திற்கான பூஜையைத் தொடங்குகிறோம். இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. மனநிறைவுடன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்புங்கள். ‘OM’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விரைவில் சந்திப்போம். இங்கு வந்து இந்தப் படத்திற்குத் தங்களது அன்பையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.